×

கோலவில் ராமனின் கொள்ளையழகு தரிசனம்!

ஸ்ரீராம நவமி  13.04.2019

நாராயணா… என்ற ஓலம் கேட்டு நர்மதை நதிக்கரையே நடுங்கியது. அப்படி ஒரு கதறல். அந்த கதறலில் குரலுக்கு உரியவரின் வலி அப்பட்டமாக தெரிந்தது. வலியில் துடித்தது வேறு யாருமில்லை சாட்சாத் சுக்ராச்சாரியார்தான். இப்படி அவர் வலியில் துடிதுடித்து மாதவனை அழைத்துமா நாராயணன் வரவில்லை? என்ற கேள்வி வரலாம். எப்படி வருவான். அவரது வலிக்கு காரணமே அந்த நாராயணன் தானே. சரி, அப்படி என்ன தான் நடந்தது? வாமன அவதாரம் எடுத்து நர்மதை கரையில் உள்ள, பலியின் யாக சாலைக்கு  மாதவன் வந்தான். அவன்  கையில் இருந்த ஓலைக் குடை, அவன் பின்னால் எடுக்கப்போகும் பெரிய உருவை மறைப்பது போல விளங்கியது. மார்பில் துலங்கும் கிருஷ்ணஜினம் என்ற மேலாடை, அவன் திருமார்பில் உள்ள திருமகளை மறைத்துவிட்டது. இல்லை என்றால் அவள் பார்வை பலி மீது பட்டுவிடுமே.

பிறகெப்படி பலியை வெல்வது? என்று சிந்தித்தே மாதவன் அந்த மேலாடை தரிதிருந்தான். இப்படி மாலவன் பார்த்துப் பார்த்து போட்டுக்கொண்ட  வேஷம் வாமன அவதாரம். ஆனால் வாமனனை, பார்த்தவுடன் வந்திருப்பது யார் என்று  சுக்ராச்சாரியார் புரிந்து கொண்டார். வாமன மூர்த்தி, பலியிடம் பெரிதாக  எதுவும் யாசிக்காமல் மூன்றடி மண்ணை யாசித்த போதே, இதில் ஏதோ சூது இருக்கிறது என்று சுக்கிரன் ஊகித்தார். பலியை தடுத்துப்பார்த்தார். அவன் கேட்கவில்லை. எப்படியும் தன் மாணவனை காக்க வேண்டும் என்று சுக்கிராச்சாரியார், முடிவெடுத்தார். முன்பெல்லாம் யாசகம் தரும் போது யாசகம் தருபவர் யாசிப்பவர் கைகளில் சிறிது நீர் சேர்பித்து நீங்கள் கேட்ட பொருளை தந்தேன் என்று சொல்லுவார். இதுவே யாசகம் வழங்கும் முறையாக இருந்தது. அதுபோலவே அன்றும், பலிச்சக்ரவர்த்தி வாமனர் கேட்ட பொருளை தானம் தர கமண்டலத்தை சாய்த்தான்.

ஆனால் தண்ணீர் தான் வரவில்லை.  சுக்கிராச்சாரியார் தான் வண்டாக மாறி கமண்டலத்தின் வாயை அடைத்துக் கொண்டிருக்கிறார் என்று மாதவனுக்கு புரிந்துவிட்டது. உடன் ஒரு தர்பைப் புல்லை எடுத்தான். அதை கமண்டலத்தின் வாயில் விட்டு குத்தினான். அப்போதுதான் அந்த ஓலம் கேட்டது. மாதவன் குத்தியதில் சுக்கிரனின் கண்கள் குருடாகிவிட்டது. வலியில் துடித்த சுக்கிராச்சாரியாரைக் கண்டு கேசவனின் உள்ளம் உருகியது. ‘‘தவறிலும் மிகப்பெரிய தவறு பிறர் யாசகம் தரும்போது அதைத் தடுப்பது.  நீ அசுரர்களுக்குகே குருவாக இருந்த போதிலும் அந்த தவறை செய்து விட்டாய். அதற்காகவே உமக்கு இந்த தண்டனையைத் தந்தோம். வருந்த வேண்டாம். தவத்தால் தீராத பாவமே இல்லை. ஆகவே தவம் செய். நிச்சயம் நல்வழி பிறக்கும் ஆசிகள்.” என்று  ஆறுதல் சொன்னான் மாதவன். அசுரகுரு, மாதவன் சொல்படி தவம் செய்ய சிறந்த ஒரு இடம் தேடி சுற்றித்திரிந்தார். இறுதியாக காவிரி ஆறு ஓடும் தமிழ்திருநாட்டிற்கு வந்தார்.

அங்கே வைகுண்டத்தை விட மிக அழகாக ஒரு திவ்யதேசம் இருந்தது. அதைப் பார்த்ததும் மனதை பறிகொடுத்தார் சுக்கிரன். வைகுண்டம் போல் இருக்கும் இந்த  இடத்தை நிர்மாணித்தது யார் என்று அறியும் ஆசை அவருக்கு வந்தது. அருகில் இருந்த ஒரு வழிபோக்கனிடம், ‘‘அப்பனே இந்தத் தலத்தை நிர்மாணித்தது யார். இது வைகுண்டத்தை விட அழகாக உள்ளதே?’’ என்று கேட்டார். அவன் தனக்கு தெரிந்ததை சொல்ல ஆரம்பித்தான். பிரம்ம லோகம். எப்போதும் வாணியின் வீணா நாதம் கேட்கும் இடத்தில் அன்று, ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. ஆம், தேவ சிற்பி விஸ்வகர்மாவும், அசுர சிற்பி மயனும்தான் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சொர்க்க  லோகம் முதல் அனைத்து தெய்வீக லோகத்தையும் நிர்மாணித்தது நான்தான். ஆகவே, நான்தான் சிறந்தவன்’’ என்றான் விஸ்வகர்மா.

‘‘இல்லை இல்லை பறக்கும் முப்புரங்கள் முதல் அனைத்தும் படைத்த நான் தான் சிறந்தவன்’’ என்றான்,  மயன். பிரம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. போதாக்குறைக்கு இருவரும் தங்களில் யார் சிறந்தவர் என்று பிரம்மா தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டு விட்டனர். இருவருமே பெரும் படைப்பாளிகள். பிரம்மனுக்கு இருவரில் யார் சிறந்தவன் என்றே தெரியவில்லை. ஒருவழியாக பிரம்மன், ஒரு யுக்தியைக் கண்டான். ‘‘அன்பு குழந்தைகளே! இருவருமே சிறந்தவர்கள்தான். ஆனால், விஸ்வகர்மா முழுமுதற் பொருளான நாராயணனுக்கு அழகான வைகுண்ட நகரம் கட்டித் தந்திருக்கிறான். அதன் அழகிற்கு ஈடு இணையே இல்லை ஆனால், நீயோ அப்படி ஒன்றும் செய்யவே இல்லை. ஆகவே, விஸ்வகர்மாவே சிறந்தவன். இதுவே என் தீர்ப்பு’’ என்று நியாயமான தீர்ப்பை வழங்கினான் பிரம்மன். தீர்ப்பு தனக்கு சாதகமாக வரவே விஸ்வகர்மா பிரம்மனுக்கு வந்தனங்கள் செய்து விட்டு இல்லம் திரும்பினான். ஆனால், மயனுக்குத்தான் கவலை அதிகமாகிவிட்டது.

தன் வாழ்நாள் முழுவதும் அசுரர்களுக்கே உழைத்து இளைத்து விட்டது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. தெய்வத்தை ஒருபோதும் வணங்கி தொழாதது வருத்தத்தைத் தந்தது. உடன் பிரம்மனிடம் தானும் நற்கதி அடைய ஒரு வழி சொல்லுமாறு கேட்டான். ‘‘காவிரிக்கரையில்  வைகுண்டத்தை விட அழகாக ஒரு தலம் உருவாக்கு. அங்கே அந்த மாதவனை எண்ணி தவம் புரி . உன் மனக்குறை தீரும். திருவருள் சேரும்’’ என்று பிரம்மன் உபதேசித்தான். அதன்படி, மயன் பிரம்மபுரம் என்ற இடத்திற்கு வந்தான். வைகுண்டத்தை பழிக்கும் அற்புத நகரத்தைத் தோற்றுவித்தான். அங்கேயே தவம் புரிந்தான். நல்ல நாள் கனிந்தது. நாரணன் திருவருளும் கைகூடியது. சங்கு சக்ர கதாதாரியாக, ஸ்ரீ தேவி பூதேவி சமேதனாக கருடவாகனம் ஏறி,  மாலவன் காட்சி தந்தான். ‘‘ஆராவமுதே போற்றி. நீல வண்ணா போற்றி. தாமரைக் கண்ணா போற்றி’’ என்று மயன் பலவாறு போற்றி மாதவன் திருவடி பணிந்தான். ‘‘மகனே மயன், நீ வேண்டுவது யாது? தயங்காமல் கேள். தாராளமாக தருவேன்’’ என்று கோவிந்தன் வாய் மலர்ந்து அருளினான்.

‘‘பிரபு! தங்களின் இந்த திருக்கோலத்தை விட. ராமாவதார திருக்கோலமே கண்ணுக்கும் கருத்திற்கும் இனியது. ஆகவே எனக்கு தாங்கள் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக காட்சி தர வேண்டும். இதுவே என் ஆசை’’ என்றான். ‘‘ராமவதாரத்தில் இவ்வளவு ஈடுபாடா? ஆச்சரியம்தான். கருடா! இதோ இந்த சங்கு சக்கரத்தை நீ வைத்துக்கொள். இந்த பக்தனுக்கு இது பிடிக்க வில்லையாம். இந்த கோதண்டம் மட்டும் போதுமாம். ஆகவே, இவன் மனம் குளிர நான் ராமனாக காட்சி தரப்போகிறேன். அதுவரை நீயே இதை வைத்துக்கொள்’’ என்று சொல்லி கருடனிடம் தன் சங்கு சக்கரத்தைக்  கொடுத்தான். கோதண்ட வில் ஏந்தி கோமகன் ராமனாக காட்சி தந்தான் மாயவன். மயன் ராமனை பார்த்து பார்த்து பரவசத்தின் உச்சிக்கே சென்று விட்டான். அவன் அழகை வர்ணிக்கவே முடியவில்லை. வில்லேந்திய அழகியவன் என்று பொருள்பட கோலவில் ராமன் என்று அழைத்தான். ‘‘அந்த பெயருடன் இன்றுவரை நமக்கு காட்சி தருகிறான் மாயவன். மாதவன், மயனின் வருத்தம் போக்கியதொடு மட்டும் இல்லாமல், வைகுண்டத்திற்கு  இணையாக இங்கு சதா வசிக்கிறார். “
என்று கதை சொல்லி முடித்தார் அந்த வழிப்போக்கன். அதைக்கேட்டதும் சுக்கிரன், மாதவனின் அருளை நினைத்து மெழுகாக உருகினார். அங்கேயே வண்டு வடிவத்தில் தவம் புரிந்தார். அவருக்காக மாதவன் மனம் கனிந்து காட்சி தந்து அவர் கண்ணொளியை மீண்டும் தந்தான். சுக்கிராச்சாரியார் ஆனந்தப் பெருக்கில் ‘‘சுவாமி என் கண்ணிற்கு ஒளி தந்த தங்கள் திருச் சந்நதியில் தீப ஒளியாக உங்களை என்றும் ஆராதிக்க அருள் தாருங்கள் அய்யனே’’ என்று வேண்டிக் கொண்டார். மாதவன் அவர் வேண்டுதலின் படி அவரை திருவிளக்காக மாற்றி தன்னருகே வைத்துக் கொண்டான். வெள்ளி எனப்படும் சுக்கிரனும் வணங்கி அருள் பெற்றதால் திருவெள்ளியங்குடி என்று இந்த திவ்யதேசம் அழைக்கப்படுகிறது. விளக்காக மாறிய சுக்கிரனை இன்றும் சந்நதியில் கண்டு களிக்கலாம். அதை பக்தர்கள் நேத்ர தீபம் என்று அன்போடு அழைக்கிறார்கள். மயனுக்கு அருளுவதற்காக மாதவன் சங்கு சக்ரத்தை கருடனிடம் தந்தான் அல்லவா. இத்தலத்து கருடாழ்வார் ,இன்றுவரை அந்த சங்கு சக்கரத்தை கையில் எந்தி நிற்கிறார். இந்த திருக் கோலத்தில் கருடனை வேறெங்கும் தரிசிக்க முடியாது.

கல்லில் முளைத்த வாழைதான் இத்தலத்து தலவிருட்சம்.  இத்தலத்து உற்சவரின் பெயர் ஸ்ருங்கார சுந்தரன். அதாவது ஒப்பனை செய்வதில் விருப்பம் உள்ளவன் என்று பொருள். ஆம் தன் பக்தன் மயனுக்காக நொடியில் ராமனாக மாறினான் அல்லவா. இப்படி பக்தர் கேட்கும் விதத்தில் ஒப்பனை செய்துகொள்ள விருப்பம் உள்ளவனாக இருப்பதால், அவனுக்கு இந்த பெயர் மிகவும் பொருந்தும். திருமங்கை ஆழ்வாரால் பத்து பாசுரங்களில் புகழப்பட்ட அந்த வடிவழகனை காண இரண்டு கண்கள் போதாது. கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி சோழபுரத்தில் இறங்கி அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருவெள்ளியங்குடியை அடையலாம்.  
 
திருப்புட்குழி

ஹா..... ராமா......ராமா.....என்று ஒரு தீனமான குரல். தேடிக்கொண்டு ராமனே வந்து விட்டான். ‘‘அய்யோ ஜடாயு . தந்தை இறந்த பின் உங்களின் வடிவத்தில் அல்லவா தந்தையைக் கண்டேன். இப்போது உங்களுக்கும் இந்த நிலையா? முதலில் ராஜ்யத்தை இழந்தேன். பிறகு சீதையை இழந்தேன், தற்போது உங்களை இழந்தேன். என்னை ஏன் இப்படி விதி துரத்துகிறது. அய்யோ என் செய்வேன் என்று கதறினான் ராமன். ‘‘ராமா, உன் மனைவி சீதையை ராவணன் தான் கவர்ந்து சென்றான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்து தடுத்தும் பயன் இல்லை என்னை மன்னித்து விடு. ஆனால் எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது. அதை நீ நிறைவேற்ற வேண்டும். செய்வாயா?’’ என்று தழுதழுத்த குரலில் ஜடாயு கேட்டார். ‘‘உத்தரவிடுங்கள் காத்திருக்கிறேன்’’ ‘‘ராமாயின் பதியான உன்னை விதி துரத்துகிறது என்று நீ ஆடிய நாடகம் எல்லாம் போதும். உன் நாடகத்தை இந்த வையகம் நம்பலாம்.

நான் நம்பமாட்டேன். இறக்கும் தருவாயில் இருக்கும் என்னை மேலும் சோதிக்காமல் ஸ்ரீ தேவி பூமாதேவி சகிதனாக காட்சி தருவாய். அந்த அற்புத திருக்கோலத்தை தரிசித்து விட்டே என் ஜீவன் உன்னுடன் கலக்க வேண்டும். செய்வாயா? என்று ஜடாயு கேட்டது தான் தாமதம். உடன் ஸ்ரீ ராமன், சங்கு சக்ர கதா தாரியாக , திருமகள் நிலமகள் சமேதனாக சேவை சாதித்தான். அந்த அற்புத திருக்கோலத்தை தரிசித்து விட்டே முக்தி அடைந்தான் ஜடாயு. ஜடாயுவை தந்தை என்று கூறிவிட்டான் ராமன். அப்போது ஈமச் சடங்குகளை அவன் தானே செய்ய வேண்டும்? ஆனால், அதிலும் ஒரு சிக்கல். மனைவி இல்லாமல் ஈமச் சடங்கு செய்ய முடியாது. சீதையோ இப்போது உடன் இல்லை. ஆகவே ராமன், நாராயண வடிவத்திலேயே சடங்குகளை செய்யத் தீர்மானித்தான். ஆனால், சுற்றிலும் எங்குமே தூய்மையான இடம் தென்படவில்லை. ஆகவே, தன் மடியிலேயே ஜடாயுவை வைத்து அந்திமக் காரியங்களை செய்ய முடிவெடுத்தான். சடங்குகளை செய்ய ஜலம் வேண்டுமே? அதற்காக தன் வில்லால் பூமியை ஒரு தட்டு தட்டினான்.

உடன் ஒரு தடாகம் உருவானது.  நாராயணனின் வடிவத்தில் இருந்த ராமன், அந்தத் தடாக நீரை கொண்டு தன் மடியிலேயே அந்திமக் கிரியை செய்தான். சடங்குகள் செய்யும் வேளையில் வந்த ஹோமப் புகையின் காரணமாக  திருமகளின் கண்கள் கரித்தன. ஆகவே மாலவனின் வலது புறத்திலிருந்து இடது புறத்திற்கு மாறி அமர்ந்தாள். இன்றும் திருபுட்குழியில்  நாராயணனின் வடிவத்தில் இருக்கும் ராமனை தரிசிக்கலாம். புள் என்ற பறவைக்காக குழி அதாவது குளத்தை தோற்றுவித்ததால் இத்தலம் திருப்புட்குழி என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்து தாயார் மரகதவல்லி, குழந்தை வரம் தரும் கற்பக விருட்சமாக விளங்குகிறாள். இத்தலத்து இறைவனை திருமங்கை ஆழ்வார்  இரண்டு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இப்படிப்பட்ட இறைவனை கண்ணாறக் கண்டு வாயாரப் பாட வேண்டாமா?. சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் பாதையில் பாலுசெட்டி சத்திரம் எனும் ஊருக்கு மிக அருகேயே திருப்புட்குழி அமைந்துள்ளது.

திருப்புள்ளம்பூதங்குடி

குதிரை மீது காற்றாக பறந்து கொண்டிருந்தார் திருமங்கை ஆழ்வார். வழியில் பெரிய கோயில் ஒன்று தெரிந்தது. பிறகு அவருக்கு என்ன தோன்றியதோ ‘‘ஆஹா இது என் இதய தெய்வம் மாதவனின் ஆலயம் இல்லை என்று நினைக்கிறேன். சரி வந்த வழியே செல்வோம்’’ என்று குதிரையைத் திருப்பினார். தன் அடியவன் தவறாகப் புரிந்து கொண்டு திரும்பிச் செல்வதை மாலவன் விரும்பவில்லை. உடனே கையில் வில் ஒன்றை ஏந்தி அற்புதமாக ஆழ்வாருக்கு காட்சி தந்தான். ராமனைக் கண்ட சந்தோஷத்தில் ஆழ்வார் பத்து பாசுரங்களை பாடித் தீர்த்தார். பாசுரங்களில், தவறாகப் புரிந்து கொண்டு திரும்பி சென்ற தன்னை தடுத்தாட் கொண்ட மாலவன் பெருமையை மறக்காமல் குறித்து வைத்தார். இப்படி நாடிச் சென்று அடியவர்களுக்கு வலிய தரிசனம் தருவது வேறு யாரும் இல்லை. திரு புள்ளம்பூதங்குடி வல்வில் ராமன் தான். ஸ்ரீராமன் இங்கும் ஜடாயுவிற்காக ஈமக் கடன்கள் செய்ததாக தல வரலாறு சொல்கிறது. ஈமக் கடன்கள் செய்யும் போது மனைவி அருகில் இருத்தல் அவசியம். இத்தலத்தில் ராமன் ஈமக் கிரியை செய்யும் போது சாட்சாத் பூமி தேவியே உடன் இருந்து உதவி புரிந்தாள்.

ஆகவே இத்தலத்து ராமன் சீதா சமேத ராமன் இல்லை. நிலமகள் சமேத ராமன். ராமாவதாரத்தில், மண்டோதரி மட்டும்தான் சங்கு சக்ரம் வில் அம்பு ஏந்திய வடிவத்தில் ராமனை தரிசனம் செய்தாள். வசிஷ்டர் விஸ்வாமித்திரர் போன்ற பிரம்ம ரிஷிகளுக்கும் கூட அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், மண்டோதரி தன் கற்பின் மேன்மையைக் கொண்டு அந்த பாக்கியத்தை பெற்றாள். ஆயின் நம்மை போன்ற பாமர பக்தர்களும் இத் தலத்தில் கோமகன் ராமனை சதுர் புஜங்களோடு தரிசிக்கலாம். கும்பகோணம், சுவாமிமலையிலிருந்து திருவைகாவூர் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திரு அயோத்தி

ராமன் பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஓடி , ஆடி, அரசாட்சி புரிந்த திவ்ய தேசம் அயோத்தி. யாராலும் யுத்தத்தால் வெல்ல முடியாத நகரம் என்று அதன் பெயருக்கு பொருள். மனுவினால் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பழமையான நகரம்.

எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

என்று முருகன் அடியவரான அருணகிரிநாதர் கூட ராமனின் பால லீலைகளை ரசிக்கிறார். அப்படி அந்த ராமன் பால லீலை புரிந்த திவ்ய தேசம் அயோத்தி.    பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார்,நம்மாழ்வார் போன்ற பல மகான்களால்  புகழப்பட்ட திருத்தலம். உத்திரப் பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
 
திருப்புல்லாணி

கடற்கரை. அங்கு, வானர சேனை கூடி இருந்தது. அதில் சுக்ரீவன், ஜாம்பவான், ஹனுமான், அங்கதன், விபீஷணன் முதலிய சகலரும் இருந்தனர். நடு நாயகமாக ராம பிரான் அமர்ந்திருந்தான்.  அனைவரின் முகத்திலும் சிந்தனை சாயல். “பேசாமல் சமுத்ர ராஜனிடம், கடலை கடக்க வழி என்ன? என்று கேட்டு சரணாகதி செய்தால் தான் என்ன” என்று தான் ராமனிடம் செய்ததை, ராமனை செய்யச் சொன்னான் விபீஷணன். அனைவருக்கும் சரணாக இருக்கும் நிமலனை, போயும் போயும் கடலரசனிடமா சரணாகதி செய்யச் சொல்வது. அனைவரும் சிரித்தனர். ஆனால் ராமனுக்கு அதுவே சரி என்று பட்டது. கையில் வில்லை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

இப்படி  புறப்படுகையில், கடற்கரையில் தவம் இருக்கும் ஏழு  பெண்கள் ராமனின் கண்களில் பட்டனர். ராமன் அவர்களைப் பார்த்த நொடியில் அந்த மானிடப் பெண்கள் தேவலோக அழகிகளாக மாறினார்கள். ஓடோடி வந்து ராமனின் பாதம் பணிந்து நின்றார்கள். ராமன் ஒன்றும் புரியாததுபோல், ‘‘தேவி நீங்கள் யார் எதற்காக என்னை நாடி வந்துள்ளீர்கள்?’’ என்று வினவினான்‘‘சுவாமி! நாங்கள் தேவலோகப் பெண்கள். தேவல மகரிஷியின் சாபத்தால் மானிடப் பெண்களாக மாறினோம். அவரிடம் சாப விமோசனம் வேண்டினோம். அவர் இந்தத் தலத்திற்கு வந்து புள்ளர் மகரிஷியின் சொல்படி நடக்க சொன்னார். புள்ளர் மஹரிஷி எங்களை இங்கு இருக்கும் ஜெகன்நாதப் பெருமானை வேண்டித் தவம் இருக்கச் சொன்னார். அதன் படி தவம் இருந்த எங்கள் மீது உங்கள் பார்வை பட்ட மாத்திரத்தில் எங்கள் சாபம் நீங்கியது. நீங்களே அந்த ஜெகன்நாதன். எங்களுக்கு அருள் புரியுங்கள்’’ என்று வேண்டினார்கள். ‘‘அப்படியா? ஆச்சரியம்தான். அந்த ஜெகன்நாதனை நானும் காண வேண்டுமே’’ ‘‘இதோ அழைத்துப் போகிறோம் சுவாமி’’ என்று சொல்லி அந்த தேவ கன்னிகைகள் ராமனை ஜெகன்நாதனிடம் அழைத்துச் சென்றார்கள். ராமன் அவனையே அங்கு கண்டு வணங்கினான். ராவணனை வென்று சீதையை நல்லபடி மீட்க தன்னைத்  தானே பூஜித்துக் கொண்டான். எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்னும் இறைவனைத் துணை கொள்ள வேண்டும் என்பதை மனிதர்களான நமக்கு காட்டவே இந்த நாடகம். ராமன் செய்த தவத்தால் மகிழ்ந்த ஜெகன்நாதன் அவனுக்கு காட்சி தந்து ஒரு வில்லையும் தந்தார். அந்த வில்லைக் கொண்டே ராமன் ராவண வதம் முடித்தான். இப்படி ஒரு வில்லை தந்து ராவண வதத்தில் உதவியதால் தெய்வ சிலையார் என்ற நாமம் ஜெகன்நாதனுக்கு ஏற்பட்டது.

அந்த ஜெகன்நாதனுக்கு எதிரில் கடற்கரையில், ராமன் தர்பைப் புல்லைப் பரப்பி அதன் மீது சயனித்தான். சமுத்திர ராஜனை நோக்கி கடலைக் கடக்க வழி வேண்டி , ராமன்  சயனித்த படியே  தவம் செய்தான். இந்த கோலத்தில் ராமனை இன்றும் திருப்புல்லானி திவ்ய தேசத்தில் தரிசிக்கலாம். ராமனுக்கு உதவிய ஜெகன்நாதப் பெருமானே இத்தலத்து மூலவர். கிழக்கே திருமுக மண்டலம். ராமேஸ்வரம் செல்பவர்கள் அவசியம் கண்டு தரிசிக்க வேண்டிய அற்புத திவ்ய தேசம். ராமனை பட்டாபி ராமனாகவும் தவம் செய்யும் ராமனாகவும் இந்த கோயிலில் தரிசித்து மகிழலாம். புள்ளவர் கண்ணுவர் காலவர் போன்ற மகரிஷிகளின் தவத்தை மெச்சி நாராயணன் அரசமரமாக காட்சி தந்த திருத்தலம். திருமங்கை ஆழ்வார் மனமுருகி 21 பாடல்களால் இந்த தலத்தை பாடி உள்ளார். ராமநாதபுரத்திலிருந்து 10 கி.மீ, தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

ஜி.மகேஷ்

Tags : Raman ,looting darshan ,Kola ,
× RELATED மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு...